மட்டக்களப்பு மாவட்டத்துக்கான 2177 திட்டங்களுக்காக 11,938 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு - அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி




மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக் குழு கூட்டமானது கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது ஏற்பாட்டில் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், ஞானமுத்து ஸ்ரீநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி ஶ்ரீநாத் ஆகியோரது பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

2026ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2177 திட்டங்களுக்காக 11,938 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதன்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இதன்போது முன்னேற்ற மீளாய்வு செய்யப்பட்டதுடன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 686 திட்டங்களுக்காக 2072 மில்லியன் ரூபா நிதி ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களினால் நடைமுறைப்படுத்தப்படும் 674 திட்டங்களுக்காக 3626 மில்லியன் ரூபாய்களும் மாகாண சபையின் நிதியின் மூலம் செயற்படுத்தப்படும் 755 திட்டங்களுக்காக 2908 மில்லியன் ரூபாய்களும் மேலும் வெளிநாட்டு நிதி உதவித் திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படும் 62 திட்டங்களுக்கு 333O மில்லியன் ரூபாய்க்கான திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இம்மாவட்டத்தின் அபிவிருத்தி திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், சுகாதாரம், சுற்றாடல், வீதிகள், பாலங்கள் அமைத்தல், யானை வேலி அமைத்தல், சிறு குளங்களை புனரமைத்தல், பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்தல், காணி பிரச்சினைகள், மேய்ச்சல்தரை பிரச்சினை, ஆளணியினர் பற்றாக்குறை, குடிநீர் வழங்கல், கிறவல் அகழ்வு உட்பட்ட மேலும் பல திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் திணைக்களங்கள் சார் உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அவ்வேளை கருத்து தெரிவித்த அமைச்சர் மாவட்டத்திற்கு தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.