கொம்மாதுறை பிரதான வீதியில் மரம் முறிந்து விழுந்தது; ஏறாவூர் இ.மி.சபையின் 2 மணிநேரப் போராட்டத்தின் பின் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.


(செங்கலடி நிருபர் சுபஜன்)

மட்டக்களப்பு - கொம்மாதுறை 10ம் கட்டை பிரதான வீதியில் இன்று பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், அப்பகுதியூடான போக்குவரத்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் ஸ்தம்பிதமடைந்தது.


மட்டக்களப்பு பிரதான வீதியின் கொம்மாதுறை 10ம் கட்டை பகுதியில் நின்றிருந்த பாரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சரிந்து வீதியின் குறுக்கே விழுந்தது. இதனால் கொம்மாதுறை10ம் கட்டை பிரதான வீதி மற்றும் ஏனைய பகுதிகளுக்கான பிரதான போக்குவரத்துப் பாதை முற்றாகத் தடைப்பட்டது.  


சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏறாவூர் இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மின்சாரக் கம்பிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் மரத்தை அப்புறப்படுத்தும் பணிகளில் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.


இப்பணியில் மின்சார சபை ஊழியர்களுடன் இணைந்து  செங்கலடி பிரதேச சபையின் செங்கலடி வட்டார உறுப்பினர் அழகையா நிதர்சன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் முன்வந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கைகோர்த்தனர்.


சுமார் இரண்டு மணிநேர தீவிர போராட்டத்திற்குப் பிறகு, மின்சார சபை ஊழியர்கள் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் மரம் முழுமையாக வெட்டி அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடைப்பட்டிருந்த போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது. 

உரிய நேரத்தில் விரைந்து செயற்பட்டு பொதுமக்களின் சிரமத்தைக் குறைத்த ஏறாவூர் மின்சார சபை ஊழியர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினருக்கும், உள்ளூர் இளைஞர்களுக்கும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.