மத்திய கிழக்கு போர் பதற்றம்: கட்டுநாயக்கவில் 57 விமானப் பயணங்கள் இரத்து



மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவிருந்த 57 விமானப் பயணங்கள் இன்றைய தினமும் (03) இரத்து செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 28 விமானப் பயணங்களும், நாட்டிற்கு வருகை தரவிருந்த 29 விமானப் பயணங்களும் இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், நாளை புதன்கிழமை (04) திட்டமிடப்பட்டிருந்த 04 விமானப் பயணங்களும் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான மற்றும் அந்தப் பிராந்தியத்தினூடாக ஏனைய நாடுகளுக்குப் பயணிக்கும் விமானங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒரு சில விமானங்கள் மாத்திரம் அந்தப் பிராந்தியத்தினூடாகப் பயணித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.