விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஊடாக புதிய கியூ.ஆர் முறைமை: 7 பிரிவுகளின் கீழ் எரிபொருள் வழங்க நடவடிக்கை !


விவசாயம், மீன்பிடி மற்றும் ஏனைய வாகனமற்ற எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கியூ.ஆர் முறைமையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி எஸ். ராஜகருணா இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,

வாகனங்கள் இன்றி எரிபொருள் தேவைப்படும் தரப்பினருக்காகவே இந்த விசேட கியூ.ஆர் முறைமை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தமது எரிபொருள் தேவையை கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலகத்தில் உறுதிப்படுத்தி, இந்த புதிய கியூ.ஆர் முறைமையின் கீழ் பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்த புதிய கியூ.ஆர் குறியீடானது அந்தந்த நபர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய உருவாக்கப்படும்.

இத்திட்டம் 7 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு பிரிவிற்கும் வழங்கப்படும் எரிபொருள் அளவை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானிக்கும்.

இதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வாகனங்கள் இன்றி எரிபொருளைப் பயன்படுத்தும் அனைத்து தரப்பினரினதும் எரிபொருள் தேவைகளை இலகுவாகப் பூர்த்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவித்தார்.