உலகளவில் அச்சுறுத்தும் புதிய கொவிட் மாற்றம்: "சிகாடா" வைரஸ் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை !


உலகளவில் மீண்டும் கொவிட் தொற்று தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ள நிலையில், “சிகாடா” (Cicada) என அழைக்கப்படும் புதிய கொவிட் மாற்றம் கவனத்தை ஈர்த்துள்ளது. BA.3.2 என அடையாளம் காணப்படும் இந்த வைரஸ் வகையை உலக சுகாதார நிறுவனம் (WHO) “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” (Variant Under Monitoring) என வகைப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வைரஸ் தற்போது உலகளவில் 23க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளில் அண்மைக் காலத்தில் பதிவான கொவிட் பாதிப்புகளில் சுமார் 30% வரை “சிகாடா” வகையைச் சேர்ந்தவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவிலும் இந்த வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியா, புளோரிடா, நியூயோர்க், டெக்சாஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரிசோதனைகள் மற்றும் பயணிகளிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் மூலம் இந்த மாற்றம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

“சிகாடா” வைரஸ் முந்தைய ஒமைக்ரோன் வகைகளை விட 70க்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சில அறிகுறிகள் தீவிரமாக வெளிப்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த வைரஸ் தாக்கத்தின்போது காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

கடுமையான தொண்டை வலி

மூச்சுத்திணறல் மற்றும் சுவாச சிரமம்

அதிக சோர்வு மற்றும் தசை வலி

குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகள்

காய்ச்சல் மற்றும் குளிர் நடுக்கம்

தொடர் இருமல்

தலைவலி

சுவை அல்லது வாசனை இழப்பு

இந்த புதிய கொவிட் மாற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல்

கைகளை அடிக்கடி சவர்க்காரம் அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்தல்

மூடிய இடங்களில் அதிக நேரம் தங்குவதைத் தவிர்த்தல்

வீட்டிலும் அலுவலகங்களிலும் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்தல்

மருத்துவ ஆலோசனைப்படி தடுப்பூசிகளைப் பெறுதல்

“சிகாடா” வைரஸ் தற்போது கண்காணிப்பு நிலையில் இருந்தாலும், அதன் பரவல் வேகம் மற்றும் மரபணு மாற்றங்கள் காரணமாக உலக சுகாதார அமைப்புகள் இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

எனவே, பொதுமக்கள் தேவையற்ற அச்சமின்றி, ஆனால் விழிப்புணர்வுடன் இருந்து சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியமாகும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.