அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது - நாமல் ராஜபக்ஷ


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக மாவட்ட அமைப்பாளர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தற்போதைய அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அடுக்கடுக்கான பொய்களைக் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாகக் கடுமையாகச் சாடினார்.

தற்போதைய வரிக்கொள்கை மற்றும் அரசாங்கத்தின் முறையற்ற தீர்மானங்களால் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும், அரசாங்கத்தினால் ஏற்படும் நட்டங்கள் அனைத்தும் மக்கள் மீதே சுமத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, எரிபொருள் விவகாரத்தில் 45 நாட்களுக்குப் போதுமான கையிருப்பு இருப்பதாக முன்னதாகக் கூறிவிட்டு, தற்போது உலக சந்தை விலையை விட அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னைய ஆட்சியின் போது கணக்கில் ட்ரில்லியன் கணக்கில் பணம் இருப்பதாகக் கூறியவர்கள், இன்று அது குறித்துப் பேசுவதே இல்லை எனவும் அவர் விமர்சித்தார்.

விவசாயத் துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், உள்நாட்டு விவசாயிகளை வலுப்படுத்துவதை விடுத்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நுகரும் கலாச்சாரத்தை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கி வருவதாகக் குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகக் கிராமப்புறங்களில் உரத் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பாதுகாப்புத் தொடர்பான அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஒரு அணியாகச் செயற்பட்டு நாட்டுக்காக வேலை செய்ய வேண்டிய அரசாங்கம், பழைய அணிகளைக் குற்றம் சுமத்தித் தனது தோல்விகளை மறைக்க முயலக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும், நாட்டின் புலனாய்வுப் பிரிவுகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாகவும், ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று பல்வேறு முறைகேடுகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.