நகர அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு நகர் மீளுருவாக்கல் திட்டத்தின் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய இராணுவத்தின் ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஒருவர், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டில், கொழும்பு சிறிசந்த செவன வீடமைப்புத் தொகுதியில் உள்ள 22 வீடுகளை முறையற்ற வகையில் ஒதுக்கீடு செய்தமை தொடர்பிலேயே இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.
இருப்பினும், தகுதியற்ற நபர்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும், நிறுவப்பட்ட கொள்கை கட்டமைப்பிற்குப் புறம்பாக இந்த ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




.webp)
.webp)







.jpg)