சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வு - சந்தேகநபர் கைது !


பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செப்பல்டன் தோட்டப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் நேற்று வியாழக்கிழமை (26) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதன்போது மாணிக்கக்கல் அகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொகவந்தலாவை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.