
ஆன்லைன் வணிகங்கள் மற்றும் கூரியர் சேவை வழங்குநர்களுக்கான பதிவு முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இந்த நடவடிக்கை நுகர்வோரைக் பாதுகாக்கவும், ஆன்லைன் தளங்கள் வழியாக விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
ஆன்லைன் சந்தைப்படுத்தல் வேகமாக வளர்ந்து வருவதால் குறைந்த விலையில் பொருட்களை வழங்கும் வலையமைப்புகள் உருவாகியுள்ளன. ஆனால் சில சந்தர்ப்பங்களில், நுகர்வோருக்கு எதிர்பார்த்த தரம் இல்லாத பொருட்கள் கிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“ஆன்லைன் வணிகம் விரிவடையும் நிலையில், நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். தரமற்ற பொருட்கள் ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் சம்பவங்களை நாங்கள் நெருக்கமாக கண்காணித்து வருகிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அனைத்து ஆன்லைன் விற்பனையாளர்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டியதாக இருக்கும். மேலும், பொருட்கள் விநியோகத்தில் ஈடுபடும் கூரியர் சேவை வழங்குநர்களும் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவுள்ளனர்.









.webp)


