இக்கட்டான தருணத்தில் நாங்கள் ஈரான் மக்களுடன் நிற்கிறோம் மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - நாமல் ராஜபக்ச


ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் வான்வழித் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அதிர்ச்சி வெளியிட்டுள்ளதுடன், நாங்கள் ஈரானுடன் நிற்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் படுகொலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில், ஈரானின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் மறைவு குறித்து கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தாகவும், முன்னாள் ஈரானியத் தலைவர் இலங்கையின் நெருங்கிய நண்பர் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கையும் நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அழைப்பின் பேரில் 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அஹ்மதிநெஜாத், சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயமாக்கல் மற்றும் உமா ஓயா பன்முக அபிவிருத்தித் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் எப்போதும் இலங்கையின் உண்மையான நண்பனாக இருந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள நாமல் ராஜபக்ச, வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அனைவரினதும் குடும்பத்துக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான தருணத்தில் நாங்கள் ஈரான் மக்களுடன் நிற்கிறோம். அனைத்து தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், போர்ப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.