பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி தடையின்றி விற்பனை - விலங்கு உற்பத்தி சங்கம்


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சந்தைக்குத் தேவையான கோழி இறைச்சியைத் தடையின்றி விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இது குறித்துத் தெரிவிக்கையில்,

நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக விலை அதிகரிக்கும் அபாயம் இருந்தபோதிலும், கோழி இறைச்சியின் விலையை சுமார் 1,250 ரூபா அளவில் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலக சந்தையில் விலங்கு உணவுகளின் விலை அண்மைக்காலமாகப் பாரியளவில் அதிகரித்துள்ளன.

ஏப்ரல் மாதத்திற்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்துப் பண்ணைகளும் தமது முழு கொள்ளளவில் இயங்கி வருகின்றன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன, இந்தச் செலவுகளைத் தாங்களே சுமக்க வேண்டியுள்ளன.

சந்தையே விலையைத் தீர்மானிக்கிறது. தட்டுப்பாடு ஏற்பட்டால் விலைகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், தட்டுப்பாடின்றி விநியோகிக்க எதிர்பார்க்கிறோம்.

எனினும், டீசல் விநியோகம் அல்லது போக்குவரத்து வலையமைப்பில் திடீர் இடையூறுகள் ஏற்பட்டால், வருங்காலத்தை எம்மால் உறுதியாகக் கணிக்க முடியாது என்றார்.