எதிர்வரும் வெள்ளிக்கிழமை (06) நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று (03) நடைபெற்ற பாராளுமன்றக் காரியங்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த தனிப்பட்ட உறுப்பினர்களின் முன்மொழிவுகளை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக, 2026.02.28 ஆம் திகதியிடப்பட்ட 2477/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட பிரகடனம் உள்ளிட்ட தீர்மானங்களை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பி.ப 5.00 மணிக்கு அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானங்களை விவாதமின்றி அங்கீகரிப்பதற்கும், அதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையிலான பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளவும் பாராளுமன்றம் திட்டமிட்டுள்ளது.
வழக்கமான நடைமுறைகள் என்றாலும், முன்னதாகத் தீர்மானித்தபடி அன்று காலை நேர நடவடிக்கைகள் பின்வருமாறு அமையும்:
மு.ப 9.30 – 10.00: நிலையியற் கட்டளை 22 (1 முதல் 6 வரை) இன் கீழான பாராளுமன்ற விவகாரங்கள்.
மு.ப 10.00 – 11.00: வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப 11.00 – 11.30: நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்.
மேலும், புதன்கிழமை (04) மற்றும் வியாழக்கிழமை (05) ஆகிய தினங்களில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் படி எவ்வித மாற்றமுமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.













