
வீடொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் பெற்றோல் எரிபொருளைப் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் கல்முனை தலைமையக பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை புறநகர்ப் பகுதியில் கடை ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் சட்டவிரோத எரிபொருள் விற்பனை இடம்பெறுவதாகக் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதற்கமைய, ஊழல் ஒழிப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் முஸ்தபா தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை திடீர் சோதனையை முன்னெடுத்தனர்.
சோதனையின் போது, குறித்த வீட்டின் கட்டிலுக்குக் கீழ் மிகவும் தந்திரமாகப் போத்தல்கள் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 32 லீட்டர் பெற்றோல் எரிபொருளைப் பொலிஸார் கண்டுபிடித்து மீட்டனர்.
சம்பவம் தொடர்பாக 39 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு திங்கட்கிழமை (09) கல்முனை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தர உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












