“ஆரோக்கியம் வைத்தியசாலைகளில் மட்டுமே உருவாகுவது அல்ல; அது நமது நாளாந்த வாழ்வியல் தெரிவுகள், சமூக சூழல் மற்றும் அறிவியல் அடிப்படையிலான முடிவுகளால் வடிவமைக்கப்படுகிறது” என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் உதவிப் பிரதிநிதி தயநாத் ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
ஏப்ரல் 07 ஆம் திகதி உலக சுகாதார தினத்தையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் உதவிப் பிரதிநிதி தயநாத் ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த ஆண்டிற்கான உலக சுகாதார தினத்தின் கருப்பொருளாக ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம். அறிவியலுடன் துணை நிற்போம். “Together for Health. Stand with Science” எனும் கோஷத்தைக் குறிப்பிட்ட அவர், அறிவியலை நம்புவதோடு மட்டுமல்லாமல், அதை நடைமுறையில் பயன்படுத்துவது இன்றியமையாததாக உள்ளது.
இன்றைய சுகாதார சவால்கள் மிகச் சிக்கலானவை மற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. கொரோனா போன்ற தொற்றுநோய்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடும் வெப்பம் போன்ற அபாயங்கள், மக்கள் தொகை மாற்றங்கள், இணைய வழி வன்முறைகள் ஆகியவை அனைத்தும் புதிய சுகாதார அணுகுமுறைகளை தேவைப்படுத்துகின்றன.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பிறப்பு விகிதம் குறைவதும், உயிர் பிழைப்புத் திறன் அதிகரிப்பதும் காரணமாக, ஒவ்வொரு கர்ப்பமும் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இருப்பினும், உலகளவில் 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 2,60,000 பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய காரணங்களால் உயிரிழந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தரவின் அடிப்படையில் சுகாதார சேவைகளை மேம்படுத்தி, காலத்திற்கேற்ற தரமான சேவைகளை வழங்குவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
பாரம்பரிய உடல் வன்முறைக்கு அப்பால், டிஜிட்டல் உலகில் உருவாகும் புதிய வன்முறை வடிவங்கள், குறிப்பாக தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறை, இணைய துன்புறுத்தல் போன்றவை அதிகரித்து வருகின்றன. இவை மனநலம் மற்றும் சமூக நலத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என அவர் எச்சரித்தார்.
இதற்கான தீர்வுகள் பல துறைகளை ஒருங்கிணைக்கும் அறிவியல் சார்ந்த அணுகுமுறைகளாக இருக்க வேண்டும் என்றும், மனநலம், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்டவரை மையப்படுத்திய சேவைகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் நீண்ட நாட்கள் வாழும் நிலை உருவாகியுள்ள நிலையில், Non-Communicable Diseases எனப்படும் நீடித்த நோய்களாக நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் கர்ப்ப காலத்தில் சுமார் 13.9% பெண்களுக்கு நீரிழிவு ஏற்படுவது கவலைக்குரிய நிலை என அவர் குறிப்பிட்டார்.
இதன் அடிப்படையில், “நாம் தடுப்பு நடவடிக்கைகளில் போதுமான முதலீடு செய்கிறோமா?” என்ற கேள்வியை அவர் எழுப்பினார். ஆரம்ப கட்டத்தில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள், நீண்டகால சிகிச்சைச் செலவுகளை குறைக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
அறிவியல் மற்றும் தரவு அடிப்படையிலான முடிவுகள், சுகாதார கொள்கைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. Geographic Information System போன்ற தொழில்நுட்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் அருகிலுள்ள சுகாதார நிலையத்தை அடைய எடுக்கும் நேரத்தை வரைபடமாக்க உதவுகின்றன என அவர் விளக்கினார்.
மேலும், டெலிமெடிசின் மற்றும் நேரடி தரவு அமைப்புகள் போன்ற டிஜிட்டல் கருவிகள், சுகாதார சேவைகளை மேம்படுத்துவதோடு அவசரநிலைகளில் விரைவான பதிலளிப்பை உறுதிசெய்கின்றன.
இலங்கையில், அரசு மற்றும் அபிவிருத்தி கூட்டாளர்களுடன் இணைந்து, மட்டக்களப்பு மாகாண சுகாதார பயிற்சி மையம் போன்ற நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட்டு, தாய்ப்பிரசவ உதவியாளர்களுக்கு டிஜிட்டல் திறன்கள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
உலகளவில் சுகாதார ஆராய்ச்சிகளில் வெறும் 7% மட்டுமே பெண்களுக்கான குறிப்பிட்ட சுகாதார பிரச்சினைகளில் கவனம் செலுத்துகின்றன என்பது மிகப்பெரிய குறைபாடாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“அறிவியல் என்பது வெறும் அறிவு அல்ல; அது ஒவ்வொருவரும் ஆரோக்கியமான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவும் கருவி,” என ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் உதவிப் பிரதிநிதி தயநாத் ரணதுங்க தெரிவித்தார்.
இந்த உலக சுகாதார தினத்தில், தடுப்பு நடவடிக்கைகள், புதுமைகள் மற்றும் அறிவியல் சார்ந்த தீர்வுகளை முன்னிறுத்தி, எவரும் பின்தங்காத ஒரு சுகாதார அமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.












