உலக எண்ணெய் விலை மாற்றம் மத்தியில் இலங்கை $286 வரை செலுத்தியது - HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி



மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலையினால், இலங்கை ஒரு பேரல் எண்ணெயை சுமார் 286 அமெரிக்க டாலர் வரை வாங்கியிருக்கக்கூடும் என HSBC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜார்ஜ் எல்ஹெடெரி தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் நடைபெற்ற முதலீட்டு மாநாட்டில் பேசிய அவர், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் Brent crude விலை, ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் உண்மையான செலவுகளை பிரதிபலிப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

“தலைப்புச் செய்திகள் $100 அல்லது $110 என்று சொன்னாலும், மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் பெற முயற்சிக்கும் போது $140 முதல் $150 வரை செலுத்த வேண்டியிருக்கும். இலங்கையில் இது $286 வரை சென்றதாக தகவல் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள நிலையில், வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக குறைந்துள்ளது.

இதனால், கப்பல் போக்குவரத்து செலவுகள் ஒரு பேரலுக்கு $30–$40 வரை அதிகரித்துள்ளதுடன், காப்பீட்டு கட்டணங்களும் 0.25% இலிருந்து 5% வரை உயர்ந்துள்ளன.

இந்த நிலைமை சிறிய பொருளாதாரங்களை கொண்ட நாடுகள், குறிப்பாக இலங்கை போன்றவை, கடுமையான விலை அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.