பாங்காக்கில் (Bangkok) மோதல் சர்ச்சை – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மேலாளர் இடைநீக்கம்



தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட உடல் மோதல் சம்பவத்தையடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்நாட்டு மேலாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று (16) வெளியிடப்பட்ட அறிக்கையில், ஏப்ரல் 2ஆம் தேதி விமான சேவை குழுவினர் Check-in பணிகளில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது, நாட்டுப் மேலாளர் பயணிகள் Check-in பகுதியில் நுழைந்து, விமான குழுவினருடனும் நிலைய மேலாளருடனும் மோதலில் ஈடுபட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் உடனடியாக பாங்காக்கு விமான நிலைய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அதிகாரியின் நடவடிக்கை “சட்டவிரோதமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் நிறுவன விதிமுறைகளை மீறுவதாகும்” என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து இலங்கைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.