ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்பு செலவு நியாயமானது - ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ரி, ஜயநாக


நாட்டின் ஜனாதிபதி ஒருவரின் பயணங்களை உத்தியோகபூர்வம் தனிப்பட்ட விஜயம் என பிரித்து பாதுகாப்பு வழங்க முடியாது. அதனால் ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக செலவிட்ட தொகை நீதியானதாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.ரி, ஜயநாக தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசில் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் தேர்தல் மூலம் 5வருடங்களுக்கு தெரிவுசெய்யப்படுகிறார். சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்கு குறித்த பூரண காலம் வரை பதவியில் இருக்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படும்போது, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படும் ஒருவர் ஜனாதிபதியாக செயற்படுவார். அதன் பிரகாரமே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகினார்.

நாட்டு மக்களால் 5வருடங்களுக்கு தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி ஒருவருக்கு பாரிய பொறுப்புக்கள் இருக்கின்றன. அவர் அரச தலைவர், முற்படைகளின் தலைவர். நாட்டின் தலைவர். அதனால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பாதுகாப்பு வழங்கும்போது எவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் பலரும் பல கருத்துக்களை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அவர் உத்தியோகபூர் விஜயங்களை மேற்கொள்ளும்போதே அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஜனாதிபதி ஒருவருக்கு பாதுகாப்பு வழக்கும் விடயத்தில் அவரின் பயணங்கள் உத்தியோகபூர்வமா இல்லையா என்பது அவசியமில்லை. அவரின் நடவடிக்கை உத்தியோகபூரவமாக இருந்தாலும் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும் அவருக்கு தொடர்ச்சியாக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

1978 நிறைவேற்று ஜனாதிபதி முறைமை வந்ததன் பின்னர் பொலிஸ் , பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவு எனவும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு எனவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சுமார் ஆயிரம் பேர்வரை அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு விசேட வெளிநாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ஜனாதிபதிக்கு சரியான பாதுகாப்பை வழங்குவதற்கே அவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்பு, ஜனாதிபதி பதவியில் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது.அதனால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு அவர் எவ்வாறானபயணங்களை மேற்கொள்கிறார் என்பது சம்பந்தம் இல்லை. அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த சந்தர்ப்பத்தில், அவர் கியுபாவுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவருடன் பாதுப்பு பிரிவினர் சிலரும் சென்றிருந்தன். அவர்களுடனே அமெரிக்காவுக்கு சென்றார். அதன் பின்னர் அந்த பாதுகாப்பு அதிகாரிகளுடனே லண்டன் வந்தார்.

அதனால் நாட்டின் ஜனாதிபதி ஒருவர் அந்த பதவியில் இருக்கும்வரை 24 மணி நேரமும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் கொல்ப் விளையாடச் செல்கின்றபோதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

அதனால் ஜனாதிபதி ஒருவர் தனிப்பட்ட மற்றும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும்போது அவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தலில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அதனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக செலவழிக்கப்பட்டிருந்தால், அது நியாயமான, சட்ட ரீதியான செலாவே தவிர, வீண்விரயம் என கருதப்படுவதில்லை என்றார்.