பொலிஸ் முகநூல் பக்கத்தினால் தடை செய்யப்பட்ட சமூக வலைதளப் பயனருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டால் தீர்வு


பொலிஸாரின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினால் தடை செய்யப்பட்ட சமூக வலைதளப் பயனர் ஒருவருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தீர்வு கிடைத்துள்ளது.

சமூக வலைதளப் பயனர் ஒருவர், பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முகநூலில் பதிவிட்டதைத் தொடர்ந்து, பொலிஸ் ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ பக்கத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பில் பாதிப்படைந்த நபர் இது தனது கருத்துச் சுதந்திரத்தைப் பாதிப்பதாகக் கூறி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.

அரசாங்கத் திணைக்களம் அல்லது அரச நிறுவனம் ஒன்று ஒரு குடிமகனை இவ்வாறு சமூக வலைதளங்களில் தடை செய்ய முடியாது என அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணையின் போது, பொலிஸ் ஊடகப் பிரிவின் அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விளக்கம் அளித்தனர்.

இந்தத் தடை வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தானாகவே இந்தத் தடை ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், மெட்டா நிறுவனம் அத்தகைய தானியங்கித் தடை குறித்து தனக்கு எந்த அறிவித்தலையும் வழங்கவில்லை என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

தற்போது பொலிஸ் பக்கத்தில் இருந்து தனது தடை நீக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ள சமூக வலைதளப் பயனர் ,அரசு நிறுவனங்களை விமர்சிப்பது என்பது அந்நிறுவனங்களுக்கு எதிரான செயல் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொது நிறுவனங்கள் இணையதளங்களில் இயங்கும்போது அதிக பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.