வெவ்வேறு பகுதிகளில் எரிபொருள் பதுக்கல் : மூவர் கைது !


நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் எரிபொருட்களை பதுக்கி வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதவன் வீதி பகுதியில், அனுமதியின்றி பெருமளவிலான டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (06) மதியம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 4,620 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காரைதீவு பகுதியை சேர்ந்த 48 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கண்டி - உடுதும்பர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேதலாவ சந்தியில், அனுமதியின்றி பெற்றோலை பதுக்கி வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (06) மதியம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த பெண்ணிடமிருந்து 30 லீற்றர் பெற்றோல் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் மெதமஹநுவர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம், கொழும்பு - நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல பொமீரிய பகுதியில்; எரிபொருட்களை சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த ஒருவர் நேற்று திங்கட்கிழமை (06) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, 60 லீற்றர் டீசல், 30 லீற்றர் பெற்றோல், 40 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் கடுவலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொட்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.