பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸ் தலைமையகம்


பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலிக்கப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய, பொலிஸாரும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சோதனைகளின் போது இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் எழுத்து மூலமான அல்லது வாய்மொழி மூலமான முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தின் 173 ஆவது பிரிவின் படி, பேருந்து உரிமையாளர், சாரதி அல்லது நடத்துனர் எவரும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தைவிடக் மேலதிக தொகையைக் கோரவோ அல்லது பெற்றுக்கொள்ளவோ முடியாது. இதனை மீறுபவர்களுக்கு எதிராகத் தண்டனைச் சட்டக்கோவையின் 372 (பலவந்தமாக பணத்தைப் பெறுதல்), 398 (மோசடி செய்தல்) மற்றும் 386 (குற்றவியல் ரீதியான முறைகேடு) ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

ஆகையால் பேருந்துகளில் பயணிக்கும் போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலான தொகையை வழங்க வேண்டாம் எனவும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் பேருந்துகள் குறித்து 118, 119 ஆகிய துரித தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ முறைப்பாடளிக்குமாறுஞ பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.