வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு மாடுகள் கடத்தல் - உயிரிழந்த நிலையில் ஒரு மாடு மீட்பு



சட்டவிரோதமான முறையில் வெலிகந்தையிலிருந்து நிந்தவூருக்கு சிறிய ரக பட்டா லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாட்டினை, இறந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நேற்று (16) மாலை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் குறித்த பட்டா ரக வாகனத்தை கைப்பற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மிருக வதைச் சட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸாரிடம் சந்தேக நபர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாகனத்தில் அடைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ஆறு மாடுகளில் ஒரு மாடு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த மாட்டின் சடலம், காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் காத்தான்குடி கால்நடை அபிவிருத்தி சுகாதார திணைக்கள கால்நடை வைத்தியர் எஸ்.மரியா ஹர்சினியினால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.