
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று புதன்கிழமை (22) அதிகரித்துள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கம் 0.9% அதிகரித்து 4,755.11 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாத விநியோகத்திற்கான தங்கம் 1.1% அதிகரித்து 4,772.90 டொலராகவிற்பனையானது.
வெள்ளியின் விலை 1.5% அதிகரித்துஒரு அவுன்ஸ் $77.84 ஆகவும், பிளாட்டினம் விலை 1.5% அதிகரித்து$2,067.25 ஆகவும் அதிகரித்துள்ளது.
போர் நிறுத்த நீட்டிப்பால் மசகு எண்ணெய் விநியோகத் தடை நீங்கும் என்ற நம்பிக்கையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. இது பணவீக்க அச்சத்தைக் குறைத்துள்ளதால், முதலீட்டாளர்கள் மீண்டும் பாதுகாப்பான முதலீடான தங்கத்தை நோக்கித் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க டொலரின் மதிப்பு சற்று குறைந்ததும் தங்கம் விலை உயர ஒரு காரணமாக அமைந்தது.
தற்காலிக அமைதி நிலவினாலும், மேற்காசியாவின் நிச்சயமற்ற சூழல் தங்கத்தின் மீதான தேவையைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.
"தங்கம் விலையில் தற்போது ஏற்பட்டுள்ள ஏற்றம் மத்திய கிழக்கு நாடுகளின் போர் நிறுத்தச் செய்திகளைப் பொறுத்தே அமையும்," என ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் (Standard Chartered) வங்கி தனது குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், தங்கம் வரும் காலங்களில் மீண்டும் தனது வரலாற்று உச்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வங்கி குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கெவின் வார்ஷ் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்பிற்கு எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். வங்கியின் முடிவுகள் வெள்ளை மாளிகையின் தலையீடின்றி சுயமாக எடுக்கப்படும் என அவர் செனட் சபையில் உறுதியளித்துள்ளார். இது சந்தையில் ஒருவித நிலைத்தன்மையை ஏற்படுத்தியுள்ளது.












