பிரதமரின் அலுவலகத்தினால் கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் கொழும்பிலுள்ள ஒரு பிரபல பாடசாலையின் அதிபரைச் சந்தித்து, மாணவர் சேர்க்கையைத் தான் பெற்றுத் தருவதாகக் கூறி, அதற்குப் பதிலாக ஹோமாகம பகுதியில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இரண்டு வீடுகளைக் கோரியுள்ளார். இதன்போது, அவர் பாடசாலை அனுமதிப் படிவங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மனைவி பிரதமரின் பிரத்தியேக செயலாளராகப் பணிபுரிகிறார் என அதிபரிடம் பொய் கூறியுள்ள அவர், அதனை உறுதிப்படுத்துவதற்காக போலியாக உருவாக்கப்பட்ட இரண்டு முகநூல் கணக்குகளையும் காட்டியுள்ளார்.
இந்தச் சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டின் கீழ் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவர் இதற்கு முன்னர் இரண்டு வழக்குகளில் குற்றவாளியாகக் காணப்பட்டு, ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.













