யாரோ ஒருவரினது அரசியல் தேவைக்களுக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் மீதான வழக்கு விசாரணை - ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவிப்பு


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணத்தின்போது அவரின் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பில் தற்போது இடம்பெறும் வழக்கு விசாரணை யாரோ ஒருவரினது அரசியல் தேவைக்களுக்காகவே இடம்பெறுவதை எமக்கு காணக்கூடியதாக இருக்கிறதென சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழக்கு விசாரணை மாற்றப்படுவது குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டில் சுயாதீனமாக தீர்மானங்களை எடுத்துவந்த நிறுவனங்களுக்கு தற்போது அவ்வாறு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.நாட்டின் சட்டமா அதிபர் என்பவர் நீதியின் ஊற்றுக்கண்ணாகும்.

அவர் எடுக்கும் தீர்மானங்களுக்கு எதிராக யாருக்கும் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. அவர் தீர்மானங்களை சுயாதீனமாக எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் சட்டமா அதிபரை அந்த பதவியில் இருந்து நீக்கப்போவதாக பல்வேறு போலி பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. என்றாலும் சட்டத்தரணிகள் அவருடன் நின்றமையால் அந்த பிரசாரம் மறைந்துவிட்டது.

எமது நாட்டின் நீதிமன்ற நடவடிக்கைகள் நாங்கள் அனைவரும் திருப்தியடையும் வகையில் செயற்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது. நூறுவருடங்களுக்கும் அதிக பழமை வாய்ந்த இந்த நிறுவனங்கள் தற்காலத்தில் அரசியல் ரீதியிலான அழுத்தங்கள் காரணமாக வீழ்ச்சியடைந்து செல்லும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது.

உண்மையில் ரணில் விக்கிரமசிங்க, இந்த நாட்டுக்கு பாரிய சேவையை செய்த ஒருவர். அது யாரும் அறிந்த விடயம். அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது மேற்கொண்ட பயணம் தொடர்பிலே தற்போது சரச்சை ஏற்பட்டிருக்கிறது. அவர் லண்டன் ஊடாகவே அந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இங்கிலாந்தை பொறுத்தவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவானவர்களென ஆயிரக்கணக்கானவர்கள் அங்கு இருக்கிறார்கள். தற்போது விடுதலை புலிகள் செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் குறைந்திருந்தாலும் அவர்களின் அச்சுறுத்தல் எந்தநேரம், எவ்வாறு அச்சுறுத்தலாக அமையுமென எங்களுக்கு தெரிவிக்க முடியாது.

அதனால் இது தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு தரப்பினராலே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் தலைவரின் பாதுகாப்பு என்பது நாட்டின் பாதுகாப்பாகும். அவர் பாதுகாப்பு தொடர்பில் விருப்பம் இல்லாவிட்டாலும் அரசாங்கம் என்றவகையில் அவருக்கான பாதுகாப்பை வழங்க வேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புக்காக முறைகேடாக 16 மில்லியன் ரூபா செலவழித்துள்ளதாக தெரிவித்தே தற்போது வழக்கு விசாரணை இடம்பெறுகிறது.

ஆனால் 2022ஆம் ஆண்டு இதேபோன்றதொரு சம்பவத்துக்கு பிரதம நீதியரசர் உள்ளிட் உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 5பேர் கொண்ட குழு வழங்கிய வழக்கு தீர்ப்பொன்று இருக்கிறது.

அதாவது, அப்போது இருந்த ஆட்சியாளர்கள் வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வரி அறவிடுவதை தடுக்கும்வகையில் சட்ட திருத்தம் மேற்கொண்டதால், நாட்டுக்கு 650 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டடுள்ளதாக தெரிவித்து, தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, உயர் நீதிமன்ற நீதியரசர்கள் 5பேர் கொண்ட குழு ஆட்சியாளர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருந்தது.

அதேநேரம் அந்த காலப்பகுதியில் இது தொடர்பில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் நாட்டின் தலைவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீமானம் எடுக்கும்போது, அது சட்டமா அதிபர் திணைக்களத்தினாலோ அல்லது குற்றப்புலனாய்வு விசாரணை திணைக்களத்தினாலோ எடுக்கப்படும் தீர்மானத்துக்கு அமைய இடம்பெறும் என நாங்கள் ஒருபோதும் நம்புவதில்லை. அதனால் இந்த விடயங்கள் யாருடையதாவது அரசியல் தேவைக்காக இடம்பெறுகின்றதாகவே எமக்கு காணக்கூடியதாக இருக்கிறது. அதனால் சட்டத்தை நிலைநாட்டக்கூடிய நிறுவனங்கள் அதன் சுயாதீனத்தன்மையை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனை பாதுகாத்துக்கொள்வதற்காக கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.