ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட அமெரிக்க ராணுவம் முடிவு! - நீங்கள் போரிட்டால், நாங்களும் போரிடுவோம்" - ஈரான் எச்சரிக்கை:


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் கப்பல்களை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் அனைத்துலக போக்குவரத்துக்கு திறக்க ஈரானை அழுத்தம் கொடுக்க டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போர் நிறுத்தத்திற்குப் பிறகும், அந்த நீரிணையில் கப்பல் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. எனினும், கடல் கண்காணிப்பு தரவுகளின்படி 40க்கும் மேற்பட்ட வர்த்தக கப்பல்கள் அங்கு கடந்துள்ளன. இந்த அமெரிக்க முற்றுகை உலக எரிசக்தி சந்தையை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முற்றுகை அறிவிப்புக்கு பின்னர், எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 8% அதிகரித்து ஒரு பேரல் $104.24 ஆகவும், சர்வதேச அளவுகோலான பிரெண்ட் எண்ணெய் 7% அதிகரித்து $102.29 ஆகவும் உயர்ந்துள்ளது. போருக்கு முன் பிரெண்ட் எண்ணெய் விலை சுமார் $70 ஆக இருந்தது.

இதற்கிடையில், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, ஹோர்முஸ் நீரிணை தங்களின் “முழு கட்டுப்பாட்டில்” இருப்பதாகவும், இராணுவமற்ற கப்பல்களுக்கு திறந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் இராணுவக் கப்பல்களுக்கு “வலுவான பதில்” வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.

21 மணி நேர பேச்சுவார்த்தைகளின் போது, அமெரிக்கா இரண்டு போர் கப்பல்கள் நீரிணை வழியாகச் சென்றதாக தெரிவித்தது. இதை ஈரான் மறுத்துள்ளது.

பேச்சுவார்த்தை தோல்விக்கு ஈரானின் அணு ஆயுத முயற்சிகளே காரணம் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் பொதுமக்கள் வசிக்கும் அடிப்படை கட்டமைப்புகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் எச்சரிக்கையையும் மீண்டும் விடுத்துள்ளார்.

நீங்கள் போராடினால், நாங்களும் போராடுவோம்

ஈரான் தரப்பை வழிநடத்திய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், “நீங்கள் போராடினால், நாங்களும் போராடுவோம்” என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “ஈரான் அணு ஆயுதம் உருவாகாது என்ற உறுதியான உறுதிப்பாட்டை நாம் காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா முன்வைத்த முக்கிய நிபந்தனைகளில் — ஈரான் அணு ஆயுதம் உருவாக்கக் கூடாது, யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், முக்கிய அணு வசதிகளை களைந்து விட வேண்டும், உயர்தர யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும், ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் மற்றும் ஹமாஸ், ஹெஸ்பொல்லா, ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவை நிறுத்த வேண்டும் — ஆகியவற்றில் ஒப்புதல் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் தரப்பு, அமெரிக்காவின் “அதிகப்படியான கோரிக்கைகள்” காரணமாகவே பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என குற்றம்சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார், புதிய பேச்சுவார்த்தையை ஏற்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஈரானும் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தூதரக முயற்சிகளை வலியுறுத்தியுள்ளது. ஓமான் வெளிவிவகார அமைச்சர் “இரு தரப்பும் வலிய தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்