ஐந்து ஆண்டுகளில் தாதியர் சேவைக்கு 13,600 பேர் புதிதாக நியமனம் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ



தற்போதைய அரசாங்கத்தின் 2025 முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான முதலாம் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் தாதியர் சேவைக்கு புதிதாக 13,600 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று வழங்கப்பட்ட நியமனங்களுடன் அந்த இலக்கின் 30 சதவீதம் நிறைவடைந்துள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ள 2,867 தாதியர் நியமனங்களுடன் 50 சதவீத இலக்கு பூர்த்தியாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இலவச சுகாதார சேவையின் மனித வள தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், 515 அறிவியல் இளங்கலை (BSc) தாதியர் பட்டதாரிகளுக்கு தாதியர் உத்தியோகத்தர் நியமனங்களை வழங்கும் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இந்த நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு 07 இல் உள்ள இலங்கை அறக்கட்டளை நிறுவன வளாகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (29) முற்பகல் நடைபெற்றது.

மூன்றாம் தர தாதியர் உத்தியோகத்தர்களாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட இவர்கள், அரச பல்கலைக்கழகங்கள் மூலம் தாதியர் கௌரவப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதுடன், இலங்கை தாதியர் சேவை அரசியலமைப்பிற்கு அமைவாக ஆறு மாத கால தாதியர் ஆலோசனையூட்டல் மற்றும் ஒருங்கிணைப்புப் பயிற்சியை நாடளாவிய ரீதியிலுள்ள 31 அரச வைத்தியசாலைகளில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள தேசிய வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் சேவைத் தேவைகளைக் கருத்திற் கொண்டு இந்த தாதியர் உத்தியோகத்தர்களைப் பணியில் அமர்த்துவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"நாட்டில் தாதியர் சேவையில் நிலவும் வெற்றிடங்கள் தற்போது முறைப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தாதியர் கல்லூரிகளில் பயிற்சியை முடித்த 3,441 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இது அண்மைக்காலத்தில் தாதியர் சேவைக்கு ஒரே தடவையில் உள்வாங்கப்பட்ட மிகப்பெரிய குழுவாகும். இன்று நியமனம் பெறும் 515 பேருடன் சேர்த்து, கடந்த ஓராண்டு காலப்பகுதியில் 3,956 பேர் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் மேலும் 2,867 பேர் தாதியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். இதற்கமைய 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் புதிதாக 6,823 பேர் தாதியர் சேவையில் இணைக்கப்படுவர்."

இதற்கு மேலதிகமாக, மேலும் 1,949 பேரைக் கொண்ட குழுவொன்று 2028 ஆம் ஆண்டிலும், 2,920 பேரைக் கொண்ட குழுவொன்று 2029 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலும் நியமனங்களைப் பெறவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தாதியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகளை முறைப்படி உள்வாங்கித் தேவையான இலக்குகள் எட்டப்படும் என்றார்.

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க, இலங்கையில் தாதியர் சேவை என்பது மிக உன்னதமான மற்றும் கடுமையான ஒழுக்கத்தைக் கொண்ட ஒரு சேவையாக பல தசாப்தங்களாகக் காணப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

அறிவியல் இளங்கலை தாதியர் பட்டதாரிகள் மூன்றாம் தர பதவிகளுக்காக இறுதியாக 2021 ஆம் ஆண்டிலேயே உள்வாங்கப்பட்டிருந்தனர். இதற்கமைய, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர்கள், சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், வைத்தியசாலைப் பணிப்பாளர்கள், தாதியர் கல்லூரிகளின் அதிபர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.