சீன தொழில்நுட்ப உதவியுடன் மின்கல மின்சக்தி களஞ்சிய திட்டம் ஆரம்பம்



சீனாவின் தொழிநுட்ப உதவிகளுடன் நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் 16 துணை மின்நிலையங்களுக்காக 160 மெகா வோல்ட் முதல் 640 மெகா வோல்ட் கொள்ளளவு கொண்ட மின்கல மின்சக்தி களஞ்சிய கட்டமைப்பு காலி மற்றும் மாத்தறை ஆகிய மின் விநியோக துணை மின்நிலையங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது என்று துறைமுக மற்றும் சிவில் சேவை அமைச்சு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

இலங்கையின் மின்சக்தித் துறையில் புதியதொரு அத்தியாயத்தைக் குறித்து நாட்டின் 1 ஆவது வர்த்தக ரீதியான மின்கல களஞ்சியக் கட்டமைப்பு அண்மையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நாட்டில் மின்சாரத்தை விநியோகிக்கும் 16 துணை மின்நிலையங்களுக்காக 160 மெகா வோல்ட் முதல் 640 மெகா வோல்ட் கொள்ளளவு கொண்ட மின்கல களஞ்சிய திட்டங்களை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று போட்டித்தன்மையுடனான விலை மனுக்களை கோரியது. அதன் அடிப்படையில் 4 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, காலி மற்றும் மாத்தறை ஆகிய மின் விநியோக துணை மின்நிலையங்களுக்கான மின்கல கட்டமைப்புகளை நிறுவும் பணிகளை எரிசக்தி மேம்பாட்டில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற WKV Hydro குரூப் இன் அணுசரணையுடன் Galilee Bess நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதற்கான தொழிநுட்ப உதவிகளை சீனாவின் சன்கோரோ பவர் நிறுவனம் வழங்குகிறது. அதன்படி, காலி துணை மின்நிலையத்தில் ஜூலை மாதத்திலும், மாத்தறை துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் மாதத்திலும் இதன் நிறுவல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இந்த கட்டமைப்பு தேசிய மின் வலையமைப்போடு இணைக்கப்படவுள்ளன.

மின்சக்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கட்டமைப்பு ஆப்ரேட்டர் நிறுவனம் இந்த திட்டத்துக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

இந்த 2 திட்டங்களின் மூலம் பகல் வேளையில் 80 மெகா வோல்ட் மின்சக்தி சேமி்க்கப்பட்டு இரவில் மின்சாரத்துக்கு தேவை அதிகரிக்கும் நேரத்தில் மீண்டும் தேசிய மின் வலையமைப்பிற்கு விடுவிக்கப்படவுள்ளது.

தற்போதைய எரிபொருள் விலையின்படி, டீசல் மின் உற்பத்தி நிலையங்களின் செலவுடன் ஒப்பிடுகையில் இந்த மின்கல களஞ்சிய கட்டமைப்பின் மூலம் மாதாந்தம் சுமார் 200 மில்லியன் ரூபாய் வரை மின்சார சபைக்கு சேமிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் எரிபொருள் விலை ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக தற்போதைய தேசிய மின் உற்பத்தித் திறன் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் நிலையான மற்றும் நம்பகமான மின் விநியோகத்தை உறுதி செய்ய முடிவதுடன், நுகர்வோர் மற்றும் வணிக சமூகத்துக்கு சீரான விலையில் தடையற்ற மின்சாரத்தை வழங்க வழிவகுக்கும். மேலும் சூழல் மாசடைவு குறைவடைந்து சுற்றுச் சூழலுக்கு நன்மைகளும் கிடைக்கும்.

தற்போது சீனாவின் மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் அதிகமான கட்டமைப்புகள் இத்திட்டம் மூலமே நிர்வகிக்கப்படுகிறது. அத்துடன் பிரித்தானியா ஜெர்மனி மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. எதிர்காலத்தில் இலங்கையில் நிலையான நவீன மின் சக்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த தொழில்நுட்பத்தை தேசிய முன்னுரிமையாக கருத வேண்டும்.