.jpeg)
மின்சாரக் கட்டணக் குறைப்பைச் செப்டெம்பர் மாதம் வரை தாமதப்படுத்தாது, எதிர்வரும் ஜூலை மாதத்திலேயே அதற்கான மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தி உடனடியாகக் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மின்சாரப் பாவனையாளர் சங்கத்தின் தலைவர் எம்.டி.ஆர். அதுல கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் உள்ள மின்சாரப் பாவனையாளர் சங்கத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நேற்று நுவரெலியா மாவட்டக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, டீசல் இறக்குமதிக்கான செலவுகள் குறித்துத் தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மக்களைத் திசைதிருப்ப முயற்சித்துள்ளார். ஒரு லீற்றர் டீசலுக்கு 720 ரூபாய் செலவாவதாகவும், அரசாங்கம் 100 ரூபாய் மானியம் வழங்கி 392 ரூபாய்க்கு டீசலை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் இந்தக் கணக்கின்படி பார்த்தால் அரசாங்கம் 228 ரூபாய் நட்டத்தை ஏற்க வேண்டும். ஆனால், எந்தவொரு தனியார் நிறுவனமாவது இலாபமின்றி நட்டத்தைச் சுமக்கத் தயாராக உள்ளதா? இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்தாகும்.
உண்மையில், டீசல் நுகர்வு அதிகரித்துள்ளமைக்குக் காரணம் மக்கள் வாகனங்களை அதிகம் பயன்படுத்துவதல்ல. எமது அரசாங்கத்தின் முறையற்ற கொள்வனவு நடைமுறையினால் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் நாளாந்தம் 150 மெகாவாட்டிற்கும் அதிகமான மின் உற்பத்தி தடைப்பட்டது. இந்தத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காகவே அனல் மின் நிலையங்களுக்கு அதிகளவிலான டீசல் பயன்படுத்தப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் டீசலில் பெரும் பகுதி மின் உற்பத்திக்காகவே செலவிடப்படுகின்றது என்ற உண்மையை மறைத்துவிட்டு, மக்கள் மீது பழிபோடும் வகையில் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார்.
அனல் மின் நிலையங்கள் மற்றும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மறைமுக இலாபத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கோடயே இந்தத் தரவுகள் முன்வைக்கப்படுகின்றன. மின்சார சபையிலுள்ள சில அதிகாரிகளுக்குச் சொந்தமான சிறிய அளவிலான அனல் மின் நிலையங்கள் காணப்படுகின்றன. அவற்றிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்காகவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் திட்டமிட்ட முறையில் முடக்கப்படுகின்றன. சூரிய சக்தி போன்ற இயற்கையான வளங்களைப் பயன்படுத்தத் தொழில்நுட்ப ரீதியான வசதிகள் இருந்தும், அனல் மின் நிலையங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
தற்போது நாட்டில் நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ஒரு அலகு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு மிகக்குறைந்த தொகையே செலவாகின்றது. அவ்வாறிருக்கையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. செப்டம்பர் வரை தாமதிப்பதன் மூலம் மின்சார சபை பில்லியன் கணக்கில் மேலதிக இலாபத்தை ஈட்டவே வழிவகுக்கும்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது மின்சார சபையின் தேவைக்கு ஏற்ப இயங்காமல், மக்களின் பக்கம் நின்று செயற்பட வேண்டும். எனவே, எதிர்வரும் ஜூலை மாதத்தில் உடனடியாக மக்கள் கருத்துக் கணிப்பை நடத்தி, தற்போதுள்ள சாதகமான வானிலையைக் கருத்திற்கொண்டு மின்சாரக் கட்டணத்தை அமுலுக்கு வரும் வகையில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4






.jpg)



.jpeg)
.jpg)
.jpg)