.png)
அரசியல் நோக்கம் மற்றும் பழிவாங்கலை இலக்காகக் கொண்டே எம்மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முறையான விசாரணைகள் இடம்பெற்றால் நாங்கள் விடுதலையாவோம். இந்த அரசாங்கத்தில் சுயாதீன விசாரணைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை கிடையாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்ட போது பெருமளவிலான ஆதரவாளர்கள் ஆணைக்குழுவின் முன்பாக கூடியிருந்தார்கள். பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் தான் ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டார்கள் என்று ஆளும் தரப்பினர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கட்சியின் ஆதரவாளர்களை நாங்கள் அழைக்கவில்லை. அவர்கள் தாமாகவே வந்தார்கள். எமது பலத்தை அறிந்துக் கொள்ள வேண்டுமாயின் அரசாங்கம் நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த வேண்டும். அப்போது நாங்கள் எமது பலத்தை உறுதிப்படுத்துவோம்.அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டு எம்மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசியல் நோக்கம் மற்றும் பழிவாங்கலை இலக்காகக் கொண்டே எம்மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முறையான விசாரணைகள் இடம்பெற்றால் நாங்கள் விடுதலையாவோம்.
தற்போதைய நிலையில் விசாரணைகள் சுயாதீனமான வகையில் இடம்பெறுமா என்பது சந்தேகத்துக்குரியது. நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே ஜனாதிபதி வழக்கின் தீர்ப்பினை அரசியல் கூட்டத்தில் குறிப்பிட்டார்.இது நீதித்துறைக்கு விடுக்கும் பாரியதொரு அச்சுறுத்தலாகும்.
கடந்தகால அரசாங்கங்கள் நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த கால தவறுகளை செய்ய கூடாது என்று குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்றார்.






.jpg)



.jpeg)
.jpg)
.jpg)