வீட்டுக்குள் நுழைந்து இரத்தினக் கற்கள், தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற நபர் பொலிஸாரிடம் சிக்கினார்!


வீடொன்றிலிருந்து இரத்தினக் கற்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வீடொன்றுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்தவர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி, அங்கிருந்த இரத்தினக்கற்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்ததாக சந்தேக நபர் ஒருவர் தேடப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இரத்தினபுரி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குருவிட்ட, வெலிஹிந்த பகுதியில் பொலிஸார் செவ்வாய்க்கிழமை (12) இரவு சுற்றிவளைப்பில் ஈடுபட்டபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் 35 வயதுடைய குருவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

அதனையடுத்து, அவர் நேற்று புதன்கிழமை (13) இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.