
கண்டி நகர் புனித பிரதேசம் என்பதால் அதன் எல்லைக்குள் மாடு அறுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என முன்னாள் கண்டிமேயரும், தற்போதைய கண்டி விஷ்ணு மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேயுமான மஹேந்திர ரத்வத்த கண்டி மேயர் சந்திரசிறி விஜேநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கண்டி மாநகர சபை எல்லைக்குள் இறைச்சிக்காக மாடு அறுப்பது உட்பட ஏனைய விலங்குகளைக் கொல்வது தடை செய்யப்பட்டுள்ள பின்னணியில், ஒரு குழுவினர் கண்டி நகருக்குள் ஒரு இடத்தை ஒதுக்கி மாடு அறுப்பதற்கு முயற்சிப்பதாக எழுந்துள்ள விடயம் தொடர்பாக நடவடிக்ைக எடுக்கும் படி அவர் கண்டி மேயரிடம் கேட்டுள்ளார்.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு மஹேந்திர ரத்வத்தே அவர்கள் கண்டி மேயராக இருந்த காலத்தில், பௌத்தர்களின் மிக உன்னதமான இடமாகக் கருதப்படும் ஸ்ரீ தலதா மாளிகை அமைந்துள்ள கண்டி நகரினுள் விலங்குகளைக் கொல்வது மாநகர சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது.
அந்தத் தடை அமுலில் இருக்கும் நிலையில், சில தரப்பினர் அதனை நீக்க முயற்சிப்பதாக அறிய முடிகிறது என அவர் மேயருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு மாநகர சபை முன்மொழிவின் கீழ் தடை செய்யப்பட்ட மாடு அறுப்பு விவகாரம், எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு மீண்டும் அனுமதிப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதால், அது குறித்து அவதானம் செலுத்துமாறு அவர் அக்டித்தில் குறிப்பிட்டுள்ளார்.






.jpeg)





