
தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடையப் போகின்ற காரணத்தினாலேயே இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த மே தினக் கூட்டத்தின் போது உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, எதிர்கட்சி அரசியல்வாதிகளின் நீதிமன்ற வழக்குகள் குறித்து குறிப்பிட்டதுடன், மே மாதம் 25 ஆம் திகதி அனைவரும் கைதட்டுவதற்குத் தயாராக இருக்குமாறு நாட்டிற்கு அறிவித்திருந்தார். தேசிய இராணுவ தினத்தை முன்னிட்டு நாம் மலர் தூவி அஞ்சலி செலுத்தச் சென்றபோது அதற்கு தடை விதித்த பொலிஸார், எங்களை ஜூலை 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன் மூலம் ஜனாதிபதி தனது ஆதரவாளர்களை கைதட்ட வைக்கலாம் என நினைத்திருக்கலாம். இருப்பினும், நீதிமன்றம் அவர்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கவில்லை. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பரிசீலித்த நீதிமன்றம் எங்களுக்கு பிணை வழங்கியுள்ளது. எமக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் தவறு குறித்து நாம் ஏற்கனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். அத்துடன் நீதிமன்றத்தின் முன்னிலையிலும் எமது தரப்பு நியாயத்தை நிரூபிக்க நாம் தயாராக இருக்கின்றோம்.
பொதுவாக எந்த ஒரு அரசாங்கத்தினதும் ஆயுட்காலம் முடிவுக்கு வரும் போது இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளைக் காண முடியும். தற்போதைய அரசாங்கத்தும் அதுவே நடந்துள்ளது என்றார்.





.jpeg)






