இறக்காமத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: மௌலவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்


அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான மௌலவி ஒருவரும், அவருக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இக்குற்றச்சம்பவத்திற்கு ஆதரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 08ஆம் திகதி இறக்காமம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர், கடந்த 09ஆம் திகதி அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், கடந்த மே மாதம் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் அவரது விளக்கமறியல் எதிர்வரும் 03ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இக்குற்றச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பி ஓடியிருந்த நிலையில், கடந்த 20ஆம் திகதி சட்டத்தரணி ஒருவர் ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்தார். இவரும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபரான இவர், இறக்காமம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மௌலவி ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் இறக்காமம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.