சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தொடர் விசேட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 42க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை (19) முதல் காலை முதல் மாலை வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரின் பணிப்புரைக்கமையவும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமையவும், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் வழிகாட்டுதலிலும், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசாரின் மேற்பார்வையிலும், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தலைமையில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் சம்மாந்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவு, குற்றப் புலனாய்வு பிரிவு, ஊழல் ஒழிப்பு பிரிவு, சுற்றாடல் பிரிவு, பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
சம்மாந்துறை பள்ளிவாசல் நிர்வாகம் வீதி ஒழுங்குமுறைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கி வந்த போதிலும், சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாக இந்த விசேட சோதனை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின் போது மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய ஒருவர் உட்பட, தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் மற்றும் மோட்டார் சைக்கிளில் மூவர் அல்லது அதற்கு மேற்பட்டோர் பாதுகாப்பற்ற முறையில் பயணித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள பொலிஸார், அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், இப்பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதே இந்நடவடிக்கையின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் சாரதிகளுக்கு எதிராக விரைவில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிஷாந்த பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.


.jpg)


.jpg)





.png)

