
வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த சீனர்கள் மூவர் இன்று புதன்கிழமை (03) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சீன நாட்டைச் சேர்ந்த 35, 38 மற்றும் 50 வயதுடைய வணிகர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்றையதினம் அதிகாலை 02.45 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.- 319 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்த சிகரெட் தொகையை கடத்திச் செல்ல முயன்றபோதே, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இவர்களைக் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த 06 பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட 55,800 சிகரெட்டுகளைக் கொண்ட 279 சிகரெட் கார்ட்டூன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் சந்தை பெறுமதி சுமார் 83 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதி என விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.




.jpg)




.jpg)


