.jpg)
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானது. அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதியை வழங்காது. பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக கடந்த காலங்களில் போராடியவர்கள், குரல் எழுப்பியவர்கள் இன்று அமைதியாக இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவின் நிலைமை தனக்கு கவலையளிப்பதாக குறிப்பிட்டு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு நடத்தப்படும் விதம் குறித்து ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் அவரது சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
சுரேஸ் சலே ஒரு நீதவானின் விளக்கமறியல் உத்தரவின் கீழ் அல்லாமல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இங்கு ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக பல வருடங்களாக பிரச்சாரம் செய்த அதே செயற்பாட்டாளர்கள் பலர் இப்போது மௌனம் காப்பதாகும். அவர்களின் இந்த திடீர் மௌனம், அவர்களின் கொள்கை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம்.ஆனால் அது எவ்வித பாரபட்சமும், அரசியல் செல்வாக்கும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையும் இன்றி வழங்கப்பட வேண்டும். விசாரணைகள் உண்மையைக் கண்டறிவதற்குப் பதிலாக அரசியலால் வழிநடத்தப்பட்டால், அது இன்னமும் உண்மையான நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழைக்கப்படும் துரோகமாகவே அமையும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கை, விடயங்களை தெளிவாக விவரித்துள்ளதோடு, குண்டுத்தாக்குதலின் போது கடமை துஷ்பிரயோகம் மற்றும் அலட்சியத்திற்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக் கூற வேண்டியவர்களையும் அடையாளம் காட்டியுள்ளது. கடமையை மீறியதாக அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தரப்பினர் தற்போது குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. பொறுப்புக்கூறல் என்பது முக்கியமானது, ஆனால் அரசியல் பழிவாங்கல்களை நோக்கமாகக் கொண்ட விசாரணைகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருபோதும் உண்மையான நீதியை வழங்காது. இதுவே எனது நேர்மையான கருத்தாகும்.








.jpg)



