தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கூச்சலிட்ட தாய் கைது




தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றுக்குள் வீசி எறிந்த தாயொருவர், எல்பிட்டிய - கஹதூவ, துடுவெகொட பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான தாய், தனது பெண் சிசுவை கிணற்றில் தூக்கி வீசிய பின்னர், “ஐயோ... குழந்தையை கிணற்றில் போட்டுவிட்டேனே!” என்று கூச்சலிட்டுள்ளார்.

மனைவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு விறுவிறுப்பாகச் செயற்பட்ட கணவன், கிணற்றுக்குள் பாய்ந்து, அங்கு நீரில் மிதந்து கொண்டிருந்த தனது பிஞ்சு மகளைப் பத்திரமாக மேலே தூக்கியுள்ளார். பின்னர், அயலவர்களின் உதவியுடன் உடனடியாக சிசுவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். கணவனின் இந்தத் துரித நடவடிக்கையாலேயே குழந்தையின் உயிர் நூலிழப்பில் காப்பாற்றப்பட்டுள்ளது.

குழந்தை வீசப்பட்ட கிணறு அதிக ஆழமில்லாத ஒன்று என்பதால், குழந்தையை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகக் காப்பாற்ற முடிந்ததாக தெரியவந்துள்ளது. சிசுவின் உடல்நிலை தற்போது பாரதூரமானதாக இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது

தாயைக் கைது செய்துள்ள எல்பிட்டிய பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.