மட்டக்களப்பில் விடுதி தீ விபத்தில் உயிரிழந்த இரு சிறுவர்கள் - தந்தை தொடர்ந்தும் விளக்கமறியலில்


மட்டக்களப்பு நகரின் திருகோணமலை வீதியிலுள்ள விடுதியொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு, பிள்ளைகளின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்பதற்காக நீதிமன்றம் பிணை வழங்கிய போதும், அவரைப் பிணையில் எடுப்பதற்கு எவரும் முன்வராததால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் திங்கட்கிழமை (01) உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மே 27 ஆம் திகதி புதன்கிழமை மாலை, மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள விடுதி அறையொன்றில் தங்கியிருந்த இரு சிறுவர்கள் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் வெளியான நச்சுப் புகையினால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் சிறுவர்களின் தாயாருக்கு புற்றுநோய் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் போது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை, தனது மனைவிக்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பிள்ளைகளை வீதியில் வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மே 28 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் மே 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது திங்கட்கிழமை (01) வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்ட இரு சிறுவர்களது உடல்களின் முக்கிய மாதிரிகள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதனைத் தொடர்ந்து, கடந்த மே 30 ஆம் திகதி சடலங்கள் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர் பிள்ளைகளின் சடலங்களை தனது சொந்த ஊரான மாத்தறைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தந்தையை திங்கட்கிழமை (01) மீண்டும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, பிள்ளைகளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக நீதவான் அவருக்குச் சரீரப் பிணை (சொந்தப் பிணை) வழங்கியிருந்தார்.

எனினும், நீதிமன்றில் அவரைப் பிணை எடுப்பதற்கு உறவினர்களோ அல்லது வேறு எவருமோ முன்வராத காரணத்தினால், சந்தேகநபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, உயிரிழந்த இரு சிறுவர்களுக்கும் இதுவரை பிறப்புச் சான்றிதழ்கள் பதிவு செய்யப்படவில்லை என்ற விடயத்தை பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

இருப்பினும், சந்தேகநபர் கடந்த 2020 ஆம் ஆண்டு பதிவுத் திருமணம் செய்துகொண்டதாக அவர்களது திருமணப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இவர்களின் மூத்த பிள்ளைக்கு 8 வயது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த மூன்று பிள்ளைகளும் இவர்களுடைய சொந்தப் பிள்ளைகள் தானா? அல்லது கடத்தப்பட்டவர்களா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு நீர்கொழும்பு பகுதியில் உள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளதாகப் புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பிலும் மட்டக்களப்பு பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.