சம்மாந்துறை பகுதியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தம்பதியினர் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) மாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 42 வயதுடைய தம்பதியினரும், மட்டக்களப்பைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் அடங்குகின்றனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ரூ.12,000 பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை வாங்குவதற்காக மாணவர் அங்கு வந்திருந்ததாகவும், குறித்த தம்பதியினர் கடந்த ஆறு மாதங்களாக சம்மாந்துறை பகுதியில் தங்கி போதைப்பொருள் விநியோகித்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்களை இலக்காகக் கொண்டு, வங்கிக் கணக்குகள் ஊடாக பணம் பெற்ற பின்னர் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள், பல்வேறு அளவிலான ஐஸ் போதைப்பொருள், வங்கி புத்தகம் மற்றும் வங்கி ரசீதுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கணவருக்கும் பல்கலைக்கழக மாணவருக்கும் தலா ரூ.9,000 அபராதம் விதிக்கப்பட்டதுடன், பெண் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







.jpg)



.jpeg)

.jpeg)