
ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ செய்தி போன்ற வடிவில் வட்ஸ்எப் செயலி ஊடாக பரவி வரும் நுணுக்கமான நிதி மோசடி குறித்து பொதுமக்கள் உடனடியாக அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை கணினி அவசரப் பதிலளிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த மோசடி மிகவும் சட்டப்பூர்வமான மற்றும் உத்தியோகபூர்வமான முறையில் செய்யப்படுவதால், யார் வேண்டுமானாலும் இதில் மிக எளிதாக ஏமாந்துபோகும் கடுமையான அபாயம் உள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
மோசடி செய்பவர்கள், ஆட்கள் பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் அனுப்பப்படுவது போன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட வட்ஸ்எப் செய்தியொன்றை சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்புகின்றனர்.
அந்தச் செய்தியில்,
"ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தின்படி, உங்களது தேசிய அடையாள அட்டை (NIC) விபரங்களைப் புதுப்பிப்பதற்கும் சரிபார்ப்பதற்கும் ஆட்கள் பதிவுத் திணைக்களத்திற்கு நீங்கள் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகிறீர்கள்..." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, இச்செய்தியைப் பெறுபவரின் முழுப் பெயர், அடையாள அட்டை எண் மற்றும் முகவரி ஆகியவையும் அதில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், எவருக்கும் இது குறித்து சந்தேகம் எழுவதில்லை. விபரங்களைப் புதுப்பிப்பதற்காக வர வேண்டிய திகதி, நேரம், இடம் அத்துடன் எடுத்து வர வேண்டிய அசல் ஆவணங்கள் மற்றும் கைரேகை சரிபார்ப்பு (வலது பெருவிரல்) போன்ற விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியின் இறுதியில் மோசடி செய்பவர்கள் பின்வரும் முக்கியமான எச்சரிக்கையையும் சேர்த்துள்ளனர்:
"இந்தச் சரிபார்ப்புச் செயல்பாட்டில் கலந்துகொள்ளத் தவறினால், உங்களது தேசிய அடையாள அட்டையுடன் தொடர்புடைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். நீங்கள் திகதியை மாற்றியமைக்க விரும்பினால், உங்களது சந்திப்பு நேரத்திற்கு குறைந்தது 24 மணித்தியாலங்களுக்கு முன்னர் எங்களது உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளவும்."
பெரும்பாலானோருக்கு இந்தச் செய்தி குறிப்பிட்ட திகதிக்கு சற்று முன்னரே கிடைப்பதால், அடையாள அட்டை முடக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் உடனடியாக அதில் உள்ள போலி தொலைபேசி எண்ணிற்கு அழைக்கின்றனர். அதன் பின்னர், விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து OTP உள்ளிட்ட ரகசியக் குறியீடுகளைப் பெற்று, அவர்களின் வங்கி கணக்குகளை மோசடிக்காரர்கள் நுணுக்கமாகத் திருடி விடுகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா CERT நிறுவனம், ஆட்கள் பதிவுத் திணைக்களம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் விபரங்களைச் சரிபார்ப்பதில்லை என்பதை வலியுறுத்தியுள்ளது.
எனவே, இவ்வாறான செய்திகளில் உள்ள போலி இணையதள முகவரிகளுக்கு (Links) செல்வதையோ அல்லது அந்தத் தொலைபேசி எண்களுக்கு அழைப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறும், தங்களது இரகசிய வங்கி விபரங்கள் அல்லது OTP குறியீடுகளை எந்தவொரு வெளித்தரப்பினருக்கும் வழங்க வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



.jpg)








