மின்சாரம், எரிசக்தி விலைகள் அதிகரிப்பது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமையாது - பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க


உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் மின்சாரம் மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரிப்பது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாக அமையாது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு மின்வெட்டுகள் எதுவுமின்றி தடையற்ற மின்சாரம் மற்றும் எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவது குறித்து நாம் தொடர்ந்து கலந்துரையாடி வருவதுடன், கடந்த 6 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தினால் அதனை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடிந்துள்ளது.

இந்த விலை உயர்வு சூழலில் உற்பத்தியாளர்கள் தங்களின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்டு, சந்தையின் போட்டித் தன்மைக்கு முகம் கொடுக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலையாகும்.

தேசிய மக்கள் சக்தியின் கொள்கையின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் குறிப்பிட்டது போன்று எரிசக்தி செலவீனங்களை மூன்றில் ஒரு பங்காக விரைவாகக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு. தற்போதைய விலை மாற்றங்கள் உலக சந்தை நிலவரங்களுக்கு நிகரான ஒரு சீரமைப்பு மட்டுமே ஆகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நாட்டில் எந்தவித விலை திருத்தங்களும் மேற்கொள்ளப்படாததே இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் மற்றும் மின்சார சபை ஆகியன இவ்வாறான கடன்களில் மூழ்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த தவறை திருத்துவதற்காக உலக சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளை சீரமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்தது. இருப்பினும், உலக சந்தை விலைக்கு இணையாக மாற்றங்களை செய்தாலும் அரசாங்கமும் குறிப்பிட்டளவு சுமையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும் என்று உறுதியாக இருந்தோம்.

கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக அரசாங்கத்துக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதுடன், இந்த எரிசக்தி நெருக்கடியில் இருந்து மக்களின் சுமையைக் குறைப்பதற்காக அரசாங்கம் 57 பில்லியன் ரூபாயை விடுத்துள்ளது. அத்துடன், ஒட்டுமொத்தமாக 100 பில்லியன் ரூபாய் வரையிலான நிவாரணங்களை வழங்கியுள்ளது.

கடந்த 3 மாதங்களில் ஏற்பட்ட விலை உயர்வின் போது அரசாங்கம், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய தரப்பினரும் இந்த சுமையை பகிர்ந்து கொண்டது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது உலக சந்தையில் விலைகள் குறைந்து வருவதை காண முடிகிறது. எனவே, எதிர்வரும் நாட்களில் இந்தச் சுமைப் படிப்படியாக குறைந்து மக்கள் மீதான பாரம் நீங்கும் என்ற நம்பிக்கையுண்டு.

அத்துடன் எக்காரணம் கொண்டும் இனிவரும் காலங்களில் மின்சார சபையோ அல்லது பெற்றோலியக் கூட்டுதாபனமோ நட்டத்தில் இயங்குவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

பொதுமக்கள் எதிர்பார்த்த கட்டமைப்பு மாற்றம் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஏற்கனவே பல துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் கலாசாரத்தில் மாற்றம் அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வலுப்படுத்தல், போக்குவரத்துத் துறையை மேம்படுத்துதல், தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களை மீண்டும் ஆரம்பித்தல், ஏற்றுமதி மற்றும் கைத்தொழில் துறைகளின் மறுமலர்ச்சி, கல்வித்துறை சீர்திருத்தங்கள் மற்றும் சுகாதாரத் துறையை மேம்படுத்தல் போன்ற பல பணிகள் தற்போது நாட்டில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, பொருட்களின் விலை உற்பத்திச் செலவு மற்றும் வாழ்வாதார நிலை நிலைமைகள் குறித்து மக்கள் தற்போது சில சவால்களை எதிர் கொண்ட போதிலும் தொடர்ச்சியான அபிவிருத்தியின் பலன்கள் மக்களை சென்றடைய சிறிது காலம் எடுக்கும் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அரசாங்கத்துடன் இணைந்து மாற்றங்களை நோக்கி மக்கள் பயணிக்கின்றனர் என்றார்.