
சட்டவாட்சி கோட்பாட்டை மலினப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துறையாலும், நிறைவேற்றுத்துறையாலும் அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது. இது கீழ்த்தரமானதொரு செயற்பாடு என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனநாயக நாட்டில் சட்டவாட்சி கோட்பாடு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் தற்போது தகுதியில்லாதவர்களை நம்பி மக்கள் அதிகாரத்தை ஒப்படைத்து ஏமாற்றமடைந்துள்ளார்கள். ஜனநாயக கட்டமைப்பில் நீதித்துறை முக்கியமாகும். ஆனால் இன்று நீதித்துறை கட்டமைப்பில் சட்டவாட்சியில் தலையிடும், சட்டவாட்சியை தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் அரசாங்கம் கீழ்த்தரமான முயற்சியை முன்னெடுக்கின்றது. அநீதி இழைக்கப்படும் போது நீதிமன்றத்தை நாடி நீதியை எதிர்பார்க்கின்றோம். ஆனால் தற்போது நீதி பொறிமுறையின் மீதும் மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.
ஊழல் ஒழிப்பு குழுவை அமைத்து, நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவு என்ற சட்டவிரோத பொலிஸையும் நியமித்தனர். சானி அபேசேகரவை குற்றப்புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமித்து அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் தற்போது பரவலாக பேசப்படுகிறது.குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்ற போது பதவியில் இருந்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் கடமையை நிறைவேற்ற தவறினார்கள். என்று விசாரணை அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு எதிராக தற்போது எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.இது முறையற்றது என்றார்.



.jpg)








