சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும்: இல்லையேல் வடகிழக்கில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும் – சிறீதரன்


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையேல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் தோற்றம் பெறும். ஜே.ஆர். ஜயவர்தனவின் பாதையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பயணிக்க கூடாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற அவசர கால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது;

பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக மீண்டும் இந்த நாட்டில் பயங்கரமான, துயரமான சம்பவங்கள் நடந்தேறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வைத்து கிளிநொச்சி உதயநகர் கிழக்கை சேர்ந்த கணேஷ்குமார் சங்கீத்ஷன் என்ற இளம் பாடகர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

1978 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சிங்கள, தமிழ் இளைஞர்களை மிக மோசமாக பாதித்திருந்தது. இன்று அரசமைத்துள்ள ஜே.வி.பியினர் 60000 க்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர் யுவதிகள் படுகொலைசெய்யப்பட இந்த பயங்கரவாத தடை சட்டத்தை ஐக்கியதேசியக்கட்சியை சேர்ந்த ஜே .ஆர்.ஜெயவர்த்தன பிரேமதாச ஆகியோர் கொடூரமாக பயன்படுத்தியிருந்தனர்.தமிழ் இளைஞர் யுவதிகளும் பல்லாயிரக்கணக்கில் இந்த சட்டத்தினால் சகல அரசாங்கங்களினாலும் படுகொலைசெய்யப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

எதிர்க்கட்சியில் இருந்தபோது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை தாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒழிப்போம் என பல தடவைகள் கூறியிருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடக்கப்போகின்றன .இதுவரை பயங்கரவாத தடைச்சட்டம் ஒழிக்கப்படவில்லை. புதிய பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் இப்போது நீங்கள் பேசுகின்றீர்கள். ஒரு கோட்டுக்குப்பதிலாக இன்னொரு பெரிய கோட்டை கீறுகின்றீர்களே தவிர பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்கும் நிலையில் நீங்கள் இல்லை.

இந்த பயங்கரவாத தடை சட்டத்தின் மூலம் தான் தமிழ் மக்கள் இந்த நாட்டில் பல கொடுமைகளை அனுபவித்தனர். 2006-2009 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 2006 ஆம் ஆண்டு கிழக்கில் வாகரையில் நடந்த மிகப்பெரிய இனப்படுகொலை, 2009 ஆம் ஆண்டு வடக்கில் முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டமே காரணமாக இருந்தது.

இந்த சட்டத்தை பயன்படுத்தித்தான் தற்போது சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஒரு பாடல்பாடியிருந்தார். இந்த நாட்டில் பாடும் உரிமை தடுக்கப்பட்டுள்ளதா?பேசுகின்ற உரிமை,எழுதுகின்ற உரிமைஇகூட்டம் கூடுகின்ற உரிமை தடுக்கப்பட்டுள்ளனவா?அப்படியானால் இந்த சபையில் அறிவியுங்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தை வைத்தே நீங்கள் இதனை செய்கின்றீர்கள். அந்த சட்டத்தை மெருகூட்டுவதற்கா இன்றைய இந்த சட்டத்தையும் ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கொண்டுவருகின்றார்.

ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் சங்கீத்ஷனை விடுவிக்கவில்லை.இந்த பாடகர் சங்கீத்ஷனை விடுவிக்கக்கோரி வடக்கில் பல இடங்களிலும் மக்கள் போராடுகின்றனர். இந்த அரசாங்கம் சங்கீத்ஷனை உடனடியாக விடுவிக்கவில்லையானால் வடக்குஇகிழக்கு தழுவிய பாரிய போராட்டம் வெடிக்கும்.இதற்கு மக்கள் தயாராகின்றனர். இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பேசமுடியாது இருக்கின்றார்கள். கைதுகளும் அடக்கு முறைகளும் கோலோச்சுகின்றன.

அண்மையில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ்ராஜா 2 மாதங்களில், பதுளை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். நீதியான நீதிவான்கள் உடனடியாக மாற்றப்படுகின்றார்கள். முல்லைத்தீவு நீதிவான் சுவர்ணராஜாவுக்கும் நடந்தது. இதுமிகப்பெரிய வன்முறை. நீங்கள் கொண்டுவருகின்ற சட்டம் நீதித்துறையையே கேள்விக்குட்படுத்தியுள்ளது. குருந்தூர் மலையில் விகாரை கட்ட வேண்டாமென நீதிமன்றம் கடடளையிட்ட பின்னரும் பிக்குகளினால் அங்கு விகாரை கட்டப்படுகின்றது. அரசாங்கத்தினால் இதுவரை அதனை தடுக்க முடிந்துள்ளதா? அதனைத்தடுக்க முயன்ற நீதிவானை பழிவாங்கினீர்கள்.அவர் நாட்டைவிட்டு ஓடினார்.

யாழ் யூனியன் கல்லூரி மாணவர்கள் விளையாட்டுபோட்டிக்காக சோடணை செய்திருந்தார்கள். அந்த சோடணைக்காக அதிபர் வரதன் உட்பட ஆசிரியர்கள்,மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள். கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் விளையாட்டுப்போட்டி சோடணைக்கு அதிபர் அம்பிகைபாகன் உட்பட ஆசிரியர். மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்கள்.