
டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்காது என அரசாங்கம் தெரிவித்து வரும் கருத்துக்கள் அடிப்படையற்றவை. டொலரின் பெறுமதி அதிகரிக்கும் போது, நாடு மீளச் செலுத்த வேண்டிய கடன் தொகை ரூபாவில் பன்மடங்காக அதிகரித்து, அதன் ஒட்டுமொத்த சுமையும் மக்கள் மீதே சுமத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் திங்கட்கிழமை (8) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,டொலரின் பெறுமதி உயர்வடைந்து செல்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என எந்த அடிப்படையில் பிரதி நிதி அமைச்சர் கூறுகின்றார்? அவர் கூறுவது உண்மையெனில் எதற்காக நாளுக்கு நாள் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுகிறது? வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்வடையும் என கூறப்படுகிறது.
டொலரின் பெறுமதி உயர்வடையும் போது, நாம் மீள செலுத்த வேண்டிய கடன் தொகை ரூபாவில் பன்மடங்காக அதிகரிக்கும். இந்த சுமை முற்று முழுதாக மக்கள் மீதே சுமத்தப்படும். இவற்றை மறுத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தால் ஒருபோதும் நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்க முடியாது.
பொருளாதாரம் ஸ்திரமடைவதால் தான் டொலர் பெறுமதி உயர்வடைகிறது என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். உலக நாடுகளை எடுத்துக் கொண்டால் அவை தமது நிதிப் பிரிவுகளை வலுவாக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் எமது நாட்டில் மாத்திரம் தான் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து, பொருளாதார சுருங்கிக் கொண்டிருக்கிறது.
எனவே தயவு செய்து நாட்டு மக்களிடம் உண்மையைக் கூறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைவரும் இணைந்து தீர்மானங்களை எடுக்க முடியும் என்றார்.








.jpg)



