காரைதீவு பொலிஸ் நிலையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு...



குடும்பத் தகராறு காரணமாகக் கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 65 வயதுடைய, 6 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் பல மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் நிலையத்தின் சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (07) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

119 அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, குடும்பப் பிரச்சினை காரணமாகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட குறித்த குடும்பஸ்தர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தான் அணிந்திருந்த சாரத்தின் ஒரு பகுதியைத் துண்டாகப் பயன்படுத்தி, உயிரை மாய்த்துக்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயிரிழந்தவரின் உடம்பில் காயங்கள் காணப்படுவதாகவும், அவர் தூக்கிட்டுப் தற்கொலை செய்யவில்லை எனவும் கூறி, அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீதி கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உயிரிழந்த குடும்பஸ்தர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் இதே குடும்பப் பிரச்சினைக்காக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அதே பிரச்சினைக்காக இரண்டாவது தடவையாகக் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் மரண விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் காரைதீவு 1ஆம் பிரிவு, மாதவி வீதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் , காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் காரைதீவு பிரதேச சபை தவிசாளர்உட்பட பல அதிகாரிகள் பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.

பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்தவர் உயிரிழந்தமை தொடர்பில் தற்போது பல்வேறு மட்டங்களில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.