சலேவை விடுவிக்க கோரவில்லை; அடிப்படை உரிமைகள் வழங்க வேண்டும் – சுகீஸ்வர பண்டார


சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு நாங்கள் கோரவில்லை. மாறாக, அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளையும், வசதிகளையும் வழங்குமாறு மட்டுமே கோருகிறோம். அவர் சுகவீனமடைந்த நிலையில் இருப்பதால், அவருக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கவும், மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சலேவின் விவகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி கட்சி காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுரேஷ் சலேவின் விவகாரத்தில் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள சக்திகள் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்தை தற்போதைய அரசாங்கம் மிகவும் இழிவான முறையில் கையாண்டுள்ளது. குறித்த இடத்தில் எந்தவொரு அத்துமீறிய கட்டுமானமும் மேற்கொள்ளப்படவில்லை. போராட்டக்காரர்கள் வெயிலில் இருந்தும் மழையில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் தற்காலிகமாக சிறிய கூடாரமொன்றையே அமைத்திருந்தனர். அரசாங்கத்தினால் அந்த சிறிய விடயத்தைக் கூட தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இன்று நாட்டு மக்கள் மத்தியில் சுரேஷ் சலேக்கு ஆதரவான கருத்து வலுவடைந்து வருவதுடன், மறைமுகமாக மக்கள் அவருக்கு ஆதரவை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர். நேற்றைய தினம் சுரேஷ் சலேவின் தாயார் விடுத்த அறிக்கையுடன், இந்த அரசாங்கத்துக்கு இருந்த கடைசி நம்பகத்தன்மையும் முழுமையாக இல்லாது ஒழிந்துவிட்டது. இந்த அரசாங்கம் ஏதோவொன்றைச் செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களும், இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளினால் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

சுரேஷ் சலேவை விடுதலை செய்யுமாறு நாங்கள் கோரவில்லை. மாறாக, அவருக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை மனித உரிமைகளையும், வசதிகளையும் வழங்குமாறு மட்டுமே கோருகிறோம். அவர் சுகவீனமடைந்த நிலையில் இருப்பதால், அவருக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்கவும், மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்கு வசதியான இடமொன்றில் வைத்து விசாரணை நடத்துவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை. விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளின் ஊடாகவே அவர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டு விடுதலை பெற வேண்டும். அரசாங்கத்தின் இந்த இழிவான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

தற்போதைய பொலிஸ் திணைக்களம் அரசியல் நோக்கங்களுக்காகவே செயற்படுகின்றது. 160 ஆண்டுகால புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட பொலிஸ் துறையின் கீர்த்தியை, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தனது அரசியல் சார்பு நிலைப்பாட்டின் மூலம் சிதைத்து வருகின்றார். அவர் ஒரு பொலிஸ் அதிகாரி போலல்லாமல், ஒரு அரசியல்வாதியைப் போலவே செயற்படுகின்றார். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்துவதையும், மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். நாட்டின் அரசியலமைப்பையும், பொலிஸ் கட்டளைச் சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டு, அரசியல்வாதிகளின் கட்டளைகளுக்கு ஏற்ப அவர் செயற்படுகின்றார்.

இந்த விவகாரத்தை இழுத்தடித்து ஆயிரக்கணக்கான மக்களை வீதிக்கு இறக்க வேண்டாம் என அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். சுரேஷ் சலேவை மீண்டும் ஷானி அபேசேகரவின் சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பாமல், தகுந்த இடத்தில் வைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோருகிறோம். சித்திரவதை மற்றும் மனித உரிமை மீறல்களை நிறுத்துங்கள். அதேபோல், சிரில் காமினி கத்தோலிக்க திருச்சபைக்காக பேசாமல், ஷானி அபேசேகரவின் ஊடகப் பேச்சாளராகவே செயற்படுகின்றார். சுரேஷ் சலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, அதற்கு உத்தரவிட்டது நீதிமன்றம் அல்ல் அது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உத்தரவாகும். கைது செய்யப்பட்டு 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், சுரேஷ் சலேக்கு எதிரான சான்றுகள் என்ன என்பதை ஜனாதிபதி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

சுரேஷ் சலேவை சிறிய அறையில் அடைத்து வைத்து, முறையான மருத்துவ வசதிகளின்றி, உறவினர்களைச் சந்திக்க விடாமல், சித்திரவதைக் கூடத்திற்கு இணையாக நடத்துவதன் மூலம் கத்தோலிக்க சமூகத்தையோ அல்லது கர்தினால் ஆண்டகையையோ திருப்திப்படுத்த முடியாது. இது கிறிஸ்தவ சமயத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கும் முரணான செயலாகும். ஷானி அபேசேகரவை பாதுகாப்பதை விட, தூய்மையான தர்மத்தைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஷானி அபேசேகர வயதான காலத்திலும் காவல்துறை சேவையில் மிக முக்கியமான பொறுப்பில் உள்ளார். அவரது செயற்பாடுகள் காரணமாகவே அவர் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். சட்டவிரோதமான முறையில் காணி ஆவணங்களைத் தயாரித்தல், பொய்யான சாட்சியங்களை உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பாவங்களைச் செய்வதை நிறுத்தி, நீதியான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த அதிகாரங்கள் மற்றும் பதவிகள் நிரந்தரமானவை அல்ல என்பதை அரசாங்கமும் அதிகாரிகளும் நினைவில் கொள்ள வேண்டும். காலம் கடக்காமல் ஜனநாயக வழியில் நீதிக்கு மதிப்பளித்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.