(செங்கலடி நிருபர் சுபஜன்)
"பிரம்படிக்கு மாற்றாக சுய ஒழுக்கத்தை வீட்டில் வளர்க்க வேண்டும்" என கல்குடா கல்விகல்விவலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் YC.சஜீவன் தெரிவித்தார்.
இன்று செங்கலடி மத்திய கல்லூரியின் பெற்றோர் மாணவர் அபிவிருத்தி சங்கத்தின் விசேட கலந்துரையாடல் கூட்டம் இன்று காலை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் க. சுவர்ணேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கல்குடா வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப்பணிப்பாளர் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் சர்மினி உதயகுமார், பொருளாளர், சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த கல்குடா கல்விவலைய பிரதிக்கல்விப் பணிப்பாளர் YC.சஜீவன்.
மேற்கத்திய நாடுகளைப் போல இலங்கையிலும் பாடசாலைகளில் மாணவர்களை உடல் ரீதியாகத் தண்டிப்பது முற்றுமுழுதாகக் குறைக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர்களுக்கோ பெற்றோருக்கோ பிள்ளைகளை அடிக்கும் உரிமை இல்லை என்ற இந்த மாற்றம் சரியானதே. எனினும், பிரம்படிக்கு மாற்றாக வகுப்பறைகளில் மாற்று ஒழுக்கக் கட்டுப்பாட்டு வழிகளைக் கையாள்வதற்கும், சரியான ஒழுக்கத்தை வகுப்பறைகளில் கொண்டு வருவதற்கும் பெற்றோர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பிள்ளைகள் எத்தனை மேலதிக வகுப்புகளுக்குச் சென்றாலும், வீட்டில் அவர்கள் சுயகற்றலில் ஈடுபடும் 2 அல்லது 3 மணித்தியாலங்களே மிக முக்கியமானது.
வீட்டில் தொலைக்காட்சி மற்றும் வீண் தொந்தரவுகள் இல்லாத, அமைதியான சூழலைப் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மேலும், ஒரு பிள்ளை தொடர்ந்து 30 நிமிடங்கள் மட்டுமே கவனம் செலுத்த முடியும் என்பதால், முறையான ஓய்வு இடைவெளிகளுடன் படிக்கப் பழக்க வேண்டும். வீட்டில் செருப்பை முறைப்படி வைப்பது, புத்தகங்களை அடுக்குவது போன்ற சின்னச் சின்னக் கட்டுப்பாடுகள் மூலம் பிள்ளைகளின் சுய ஒழுக்கத்தை வீட்டிலிருந்தே வளர்க்க முடியும்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஒருபோதும் பக்கத்து வீட்டுப் பிள்ளை, உறவினர்களின் பிள்ளைகளுடனோ ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இது மாணவர்களிடையே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர்களைப் பாடசாலைக்கு வரவிடாமல் தடுக்கிறது.
பிள்ளைகளின் தற்போதைய புள்ளிகளை அவர்களின் கடந்த காலப் புள்ளிகளுடன் மட்டுமே ஒப்பிட்டு, படிப்படியாக அவர்களை முன்னேற்ற பெற்றோர்கள் முயல வேண்டும்.
பாடசாலையில் சராசரி மாணவர் வரவு 80% ஆக உள்ள போதிலும், வெள்ளிக்கிழமைகளில் அது 65% ஆகக் குறைவடைகிறது. பெற்றோர்கள் வெள்ளிக்கிழமைகளைச் சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களாகக் கருதக் கூடாது. ஒரு வெள்ளிக்கிழமை தவறும் 6 மணித்தியாலக் கற்றல் பிள்ளையின் கல்வியை வெகுவாகப் பாதிக்கும் என்பதை உணர்ந்து, பிள்ளைகளைத் தவறாது பாடசாலைக்கு அனுப்ப வேண்டும்.
மாணவர்களின் கவனக் கால அளவை (Attention Span) மொபைல் போன் பாவனை பெருமளவில் குறைக்கிறது. இணையத்தில் குறுகிய நேர வீடியோக்களைப் பார்த்துப் பழகும் பிள்ளைகளுக்கு, வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அரை மணித்தியாலம் கூடக் கவனிக்கும் பொறுமை இருப்பதில்லை. கவனம் சிதறும் பிள்ளைகளால் கல்வியில் சிறந்து விளங்க முடியாது என்பதால், பிள்ளைகளின் கைகளில் மொபைல் போன்களைக் கொடுப்பதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிள்ளைகளின் வாழ்வில் மூன்று முக்கிய நேரங்கள் உள்ளன: காலை எழும்பும்போது, பாடசாலை முடிந்து வரும்போது, மற்றும் இரவில் உறங்கச் செல்லும்போது. இந்த மூன்று நேரங்களிலும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் வெறுமனே கடமைக்குச் செயல்படாமல், அன்போடு பேசி, அன்றைய நாளின் திட்டங்கள் மற்றும் பாடசாலைச் செயல்பாடுகள் குறித்துக் கலந்துரையாட வேண்டும்.
பெற்றோரின் இந்தச் சிறு பேச்சு மற்றும் நேர்மறையான அணுகுமுறை பிள்ளைகளின் நடத்தையில் பெரும் நல்மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் பிரதிக்கல்விப்பணிப்பாளர் YC.சஜீவன் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.



.jpeg)






.jpg)





.png)

