22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உதய கம்மன்பில


நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அது தொடர்பில் மக்களின் கருத்தை அறிய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கிலேயே இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஓய்வுபெறவுள்ள நிலையில், ஆரம்பத்தில் அவரது சேவைக் காலத்தை மட்டும் நீட்டிக்க முயற்சிக்கப்பட்டதாகவும், அதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிபதிகளின் பதவிக்காலத்தையும் நீட்டிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், இந்தத் திருத்தத்தின் பயனாளிகளாக உயர்நீதிமன்ற நீதியரசர்களே இருப்பதால், அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருக்கும் என்றும், எனவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் தீர்ப்பைப் பெற வேண்டும் என்றும் உதய கம்மன்பில வலியுறுத்தினார்.