போதைப்பொருள் சோதனையில் 315 சாரதிகள் கைது


வாகன சாரதிகள் உணவு உட்கொண்ட பின்பு, அவர்களது சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவற்றில் கஞ்சா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அந்த சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்ஹ தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் கடந்த 6 மாத காலப்பகுதியில் 315 சாரதிகளை கண்டி, மாத்தளை மற்றும் கம்பளை பகுதிகளில் போக்குவரத்துப் பொலிஸார் கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதையும் சுபசிங்ஹ சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பிரதான போக்குவரத்துப் பாதைகளின் இரு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒரு சில வியாபார நிலையங்களில் தொடர்ச்சியாக வாகன சாரதிகள் உணவு உட்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களின் சிறுநீர் மாதிரிகள் சோதனையிட்ட பொழுதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இது தொடர்பாக பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா உட்கொள்வதில்லை என ஆரம்பத்தில் அந்த சாரதிகள் மறுத்தபோதும், சிறுநீர் மாதிரிகள் சோதிக்கப்பட்ட பின்பே, அவர்கள், தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருளான கஞ்சாவை உட்கொண்டுள்ளமை தெரியவந்தள்ளது.

அவர்கள் உண்ட உணவு மூலமாகவே கஞ்சா உடலுக்குள் சென்றிருக்கவேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சில வர்த்தக நிலையங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் கஞ்சா சேர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இதுபோன்ற வியாபார நிலையங்களில் எவ்வாறான சுகாதாரம் பேணப்படுகிறது என்பது குறித்தும் சட்ட வைத்திய அதிகாரி கேள்வி எழுப்புகிறார்.

மேலும், வைத்திய அறிக்கைகள் ஊடாக சில சாரதிகள் போதைப்பொருள் உட்கொண்டுள்ளமை தொடர்பாக குற்றம் சுமத்தப்படுகின்றனர். இது இவர்களை அறியாமல் நடப்பதாகவும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கிறார்.

நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் புகைப்பொருட்களை, விலை குறைவு என்பதால் வாகன ஒட்டுநர்கள் வாங்கி உட்கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பேராதனை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பாலித பண்டார சுபசிங்ஹ மேலும் குறிப்பிட்டுள்ளார்.