
டால்க் (Talc) கலந்த குழந்தைகளுக்கான பவுடர் கருப்பை முட்டைப்பை (Ovarian) புற்றுநோயை ஏற்படுத்தியதாக அமெரிக்காவில் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளைத் தீர்க்க, 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் கூட்டாட்சி மற்றும் மாநில நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சுமார் 69,000 வழக்குகளை உள்ளடக்கியதாகவும், டால்க் தொடர்பான நிலுவை வழக்குகளில் 99.75 சதவீதத்தை இது பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த ஒப்பந்தம் இறுதி அமலுக்கு வர, வழக்குத் தொடர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் அதனை ஏற்க வேண்டும்.
டால்க் என்பது மென்மையான இயற்கை கனிமமாகும். இது முன்பு குழந்தைகளுக்கான பவுடர் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும், புற்றுநோயுடன் தொடர்புடையதாக எழுந்த கவலைகளைத் தொடர்ந்து அதன் பயன்பாடு குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு (WHO) டால்கை "மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்" என வகைப்படுத்தியது.
ஆனால், டால்க் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்ற தனது நிலைப்பாட்டை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், நிறுவனம் 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், 2023 ஆம் ஆண்டு உலகளாவிய அளவிலும் டால்க் கலந்த குழந்தைகள் பவுடர் விற்பனையை நிறுத்தியது.
இதேவேளை, இந்த ஒப்பந்தம் இங்கிலாந்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு பொருந்தாது. அங்கு 7,000-க்கும் மேற்பட்ட மனுதாரர்களை உள்ளடக்கிய, நாட்டின் மிகப்பெரிய தயாரிப்பு பொறுப்பு (Product Liability) வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
அந்த வழக்கிலும், டால்க் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பதை அறிந்திருந்தும் நிறுவனம் தனது தயாரிப்பை தொடர்ந்து விற்பனை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுகளையும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மறுத்துள்ளது.




.jpg)





.jpg)


